புரளிகளால் பதற்றத்தையும் கவலையையும் பரப்பும் நேரமல்ல – ஏ.ஆர்.ரகுமான்

மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல என பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி என குறிப்பிட்டுள்ளார். இப்படியான தருணத்தில் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து கண்ணுக்கு தெரியாத கிருமியை எதிர்த்து போராடுவதே நமது நோக்கமாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். அண்டை வீட்டார், மூத்த குடிமக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகளுக்கு உதவி செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார் எனவும், அது தான் பரிசுத்தமான கோயில் என்றும் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். இப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒன்று கூடி குழப்பத்தை ஏற்படுத்த சரியான நேரமல்ல என்றும், அரசு கூறும் அறிவுரையை கேளுங்கள் எனவும், தொற்றை பரப்பி சக மனிதருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள் என்றும் ஏ.ஆர்.ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார். புரளிகளை பரப்பி இன்னும் பதற்றத்தையும், கவலையையும் பரப்பும் நேரமல்ல இது எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version