ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில், டிக் டாக் மூலம் ஏற்பட்ட மோகத்தால் கணவரை பிரிந்து தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆதோணியை சேர்ந்த அர்ச்சனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அர்ச்சனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து போனில் பேசி தங்களது நட்பை வளர்த்துக்கொண்டனர்.
மேலும் அஞ்சலி ஆதோனிக்கு வந்து ஒரு வாரத்திற்கும் மேலாக அர்ச்சனா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அஞ்சலி,அர்ச்சனா இடையே ஏற்பட்ட நெருங்கிய நட்பு எல்லை மீ்றுவதை அறிந்த குடும்பத்தினர் இரண்டு பேரையும் பிரிக்க முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ஒரு கட்டத்தில் அஞ்சலி அர்ச்சனாவுக்கு ரகசியமாக செல்போன் வாங்கி கொடுத்து அதன் மூலம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இதனை அறிந்த பெற்றோர் மற்றும் கணவர் ரவிகுமார் அர்ச்சனாவை கண்டித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். அர்ச்சனாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஆதோனி முதலாவது நகர காவல் நிலையத்தில் குடும்பத்தார் புகார் அளித்தனர். புகாரை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிக் டாக் மோகத்தால் தங்கள் பெண்ணின் வாழ்க்கையை அஞ்சலி சீரழித்து விட்டதாக அர்ச்சனாவின் பெற்றோர்கள் கதறுகின்றனர்.