வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் தொடர் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் அசாம் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், அசாமில் வீடு ஒன்றில் புலி ஒன்று மெத்தை மீது படுத்து, ஓய்வெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்திலுள்ள உலக புகழ்பெற்ற காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவிலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால், பூங்காவிலிருந்து வனவிலங்குகள் சில உயிரிழந்தன. மேலும் சில விலங்குகள் தப்பி, குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது. இதில் புலி ஒன்று, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து மெத்தை மீது புலி படுத்து உறங்கியுள்ளது.
அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லை. வீட்டு உரிமையாளர் வீடு திரும்பியதும் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் அளித்தார். விரைந்து வந்த வனத்துறையினர், ஓய்வு எடுத்த வந்த புலியை வெளியேற்றி, பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
புலி மெத்தை மீது ஓய்வு எடுத்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.