சீன அதிபரின் வருகையை எதிர்க்கத் திட்டமிட்டுள்ள திபெத்தியர்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குத் தாம்பரத்தில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வந்துள்ள திபெத்தியர்கள் 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வரும் 11ஆம் தேதி பிரதமர் மோடியும் சீன அதிபர் சி ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வரவுள்ளனர். இவர்களின் சந்திபிற்காகச் சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிழக்குத் தாம்பரத்தில் தங்கியுள்ள திபெத் மாணவர்களின் நடமாட்டத்தைப் பரங்கிமலை தனிப்பிரிவு காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இதையடுத்து ஒரு பெண் மற்றும் 2 மாணவர்கள் உட்பட 8 பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 8 பேரில் ஒருவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மாணவர் ஆவார். அவர்கள் 8 பேரும் சீன அதிபரின் வருகையை எதிர்க்கத் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்தனர். இதேபோல் எதிர்ப்புத் தெரிவிக்க வேறு எவரேனும் திட்டமிள்ளார்களா என்பது குறித்துச் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திபெத்தியர்கள் தங்கியுள்ள இடங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version