தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் நேற்று மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைப் பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,நாகை,கடலூர்,விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,காரைக்கால், புதுக்கோட்டை,கன்னியாகுமரி,ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகை, வெளிப்பாளையம், சிக்கல் பொரவச்சேரி அக்கரைப்பேட்டை, துறைமுகம் மற்றும் நாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. திடீர் மழையினால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால், அப்பகுதி முழுவதும் இதமான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இடி மின்னலுடன் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கொடைரோடு சுற்றுவாட்டார கிராம பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கன மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இருப்பினும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகளும், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version