வெப்பசலனம் காரணமாக, கோவை, சேலம், நாமக்கல் உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பின்னர் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என்பதால், முற்பகல் 11 மணி முதல், மதியம் 4 மணிவரை, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.