காவலரை தாக்கிய விவகாரத்தில் 4 இளைஞர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக உள்ள கார்த்திகேயன் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுபோதையில் காரில் வந்த நான்கு பேர் திருநங்கைகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலைந்து போக அறிவுறுத்திய காவலர் கார்த்திகேயன் மீது, அந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். தங்களை வழக்கறிஞர்கள் என்று அந்த நபர்கள் கூறிக் கொண்டனர். தாக்குதலில் காயமடைந்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், முஹம்மத் ரிஸ்வான், சுலைமான், அப்சர் உசேன், முகமது நவ்ஷாத் அலி ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.