3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு – ஆராய்ச்சியாளர்களின் சாதனை என்ன?

கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயல் இழப்பினால் உலகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்த மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் 3 மருத்துவர்கள். கல்லீரல் நோய்க்கு காரணமான ஹெப்பாடைட்சிஸ் சி வைரசையும் அதன் மரபணு வரிசையும் கண்டுபிடித்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஹெபடைடிஸ் அல்லது கல்லீரல் அழற்சி நோய் மனித உடலில் பரவி கல்லீரலை செயலிழக்கச் செய்கிறது. உலகம் முழுவதும் 7 கோடி பேர் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வருடத்திற்கு 4 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஹெபடைடிஸ் வைரஸில் ஏற்கனவே ஏ மற்றும் பி என்ற இரண்டு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் இருந்தாலும் கல்லீரல் செயல் இழப்பினால் ஏற்பட்ட உயிர்பலி தொடர்ந்தது.

இதற்கான காரணத்தை ஆராய்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஹஃப்டோன் ஆகிய 3 விஞ்ஞானிகளும் ஹெபடைடிஸின் புதுவகையான வைரசை கண்டுபிடித்து அதற்கு ஹெப்பாடைட்டிஸ் சி எனப் பெயரிட்டனர். அந்த வைரசின் மரபணு வரிசையையும் கண்டுபிடித்தனர்.

இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் ஹெபடைடிஸ் சி வைரசுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்க உதவியது. இதுதொடர்பாக நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெபடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்பு நாள்பட்ட ஹெபடைடிஸ் நோய்க்கான காரணத்தை கண்டறிந்ததோடு, ரத்த பரிசோதனைகளின் வாயிலாக நோயை அறிந்து புதிய மருந்துகளை உருவாக்குவதையும் சாத்தியமாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் உயிரையும் காப்பாற்ற முடிந்ததாக நோபல் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பரவலால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹெப்படைட்டிசிஸ் சி வைரசை கண்டுபிடித்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேருக்கும் பரிசுத் தொகையும் சான்றிதழும் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது.

Exit mobile version