இலங்கை குண்டுவெடிப்பை அடுத்து தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இலங்கையின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பக்தர்கள் முழு சோதனைக்கு பிறகே பேராலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இலங்கைக்கு அருகில் உள்ள கோடியக்கரை கடல்பகுதி உட்பட நாகையின் 53 மீனவ கிராம கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் கூடுதலாக 19 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலோர பகுதிகளில் அடையாளம் தெரியாத படகுகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.