களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் மூன்று ஐ.எஸ். தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகியோர் சுட்டுக் கொலை செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான இருவரும் பெங்களூருவில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர், ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டிணத்தில் பதுங்கியிருந்த போது, காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆகிய அந்த மூவர் மீதும், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை கைது செய்த போது, தப்பியோடிய ஐ.எஸ். ஆதரவாளர் ஷேக் தாவூத்தை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில், கைதான மூவரும் ஐ.எஸ் அமைப்பிற்காக இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.