ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூலின் கிழக்கு பகுதியில் பெட்ரோலியம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகத்தின் ஊழியர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்து, பேருந்து மீது மோதி வெடிக்க செய்தான். இதில் அந்த பகுதியே அதிர்ந்து கரும்புகை எழுந்தது. குண்டுவெடிப்பில் பேருந்து உருக்குலைந்து போனது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Exit mobile version