கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி மிரட்டல்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார்185 மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 12 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கழிவறைகளை சீருடை அணிந்த படி மாணவர்கள் கழுவி சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியான நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் கண்துடைப்புக்காக ஆய்வு நடத்திவிட்டு, சம்பவம் குறித்து மேலிடத்தில் தெரிவிக்கப்படும் என மழுப்பலாக செய்தியாளர்களிடம் கூறிவிட்டு எஸ்கேப் ஆனார்.

களத்தில் இறங்கி மேலும் பல தகவல்களை சேகரிக்க தொடங்கிய போது, பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்த மாணவர்கள் அனைவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ஆண்டிபட்டி சுற்றுப்புறத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட 2 சமூகங்களைச் சேர்ந்த பட்டியலின மாணவர்கள், தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜனகராஜ் என்பவரால் மிரட்டப்பட்டு கழிவறை சுத்தம் செய்யும் பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே கூறினால் டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்றும் மதிப்பெண்களை குறைவாக வழங்குவேன் என்றும் மாணவர்களை மிரட்டி வந்துள்ளார் ஜனகராஜ். பட்டியலின மாணவர்களோடு நிறுத்தி கொள்ளாது, பட்டியலின் மாணவிகளை பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.

மாணவர்களை துன்புறுத்தும் தலைமை ஆசிரியரின் விவரங்களை திரட்ட தொடங்கியபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கனவே அனுப்பபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றிய போது ஜனகராஜ் மீது பாலியல் வழக்கு போடப்பட்டு, அது நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பள்ளிக்கு மது அருந்தி விட்டு வருவது, சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன்வைக்கின்றனர். பள்ளி மாணவர்களை இதுபோன்று மிரட்டி வரும் தலைமை ஆசிரியர் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version