காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்த திமுக எம்.எல்.ஏ உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதையடுத்து தேரடி சாலையில் திமுகவினர் எழிலரசன் எம்.எல்.ஏ தலைமையில் கூடியிருந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்தை சரி செய்ய வந்த போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் எழிலரசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் போலீசாரை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர். மேலும் நான் யார் தெரியுமா? என்று கேட்டு அராஜகத்திலும் ஈடுபட்டனர். இதனால் தேரடி காந்தி சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் எழிலரசன் எம்.எல்.ஏ உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.