தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 30 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 927 பேரில், ஆயிரத்து 162 பேர் ஆண்கள், 765 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில், ஆயிரத்து 392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 937ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் புதிதாக 182 பேருக்கும், திருவள்ளூரில் 105 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 33 பேரும், ராணிப்பேட்டையில் 25 பேரும், தூத்துக்குடியில் 24 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆயிரத்து 8 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 333ஆக அதிகரித்துள்ளது. 52 புள்ளி 48 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 19 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. 17 ஆயிரத்து 179 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.