மதுரை மாவட்டம் பேரையூர் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜசோழனின் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேரையூர் அருகே காரைக்கேணியில் உள்ள செங்கமேடு எனும் இடத்தில் பழமையான சத்திரம் ஒன்றை வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த சத்திரத்தின் சுவர்களிலும், அருகில் உள்ள கிணற்றின் சுவர்களிலும் ராஜராஜசோழனின் கல்வெட்டுகள், பழங்கால தமிழ் எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 24வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரு சமணப்பள்ளி இருந்தற்கான கட்டடங்களின் செங்கல் குவியல்களும், மக்கள் வாழ்விடப்பகுதியாக இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. மேலும் கல்செக்கு, கோவில் கல் என பல்வேறு எச்சங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்பகுதிகளில் விரிவான அகழாய்வு மேற்கொண்டு வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.