குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ஆயிரத்து 321 கோடி வழங்க வேண்டும்!

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ஆயிரத்து 321 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய பேக்ஸை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அதில், தமிழக அரசின் சிறப்பான சிகிச்சையால், இதுவரை ஆயிரத்து 20 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் ஒன்று புள்ளி 2 சதவிகிதமாக மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கூடுதலாக பிசிஆர் கருவிகளை அனுப்புமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். மருத்துவ உபகரணங்கள் வாங்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ஏற்கனவே கோரிய நிதியை உடனடியாக வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க, ஆயிரத்து 321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன் மீதான வட்டியை 6 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமருக்கு அனுப்பிய பேக்ஸில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி செலுத்த 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார். நகர்ப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் 50 சதவீதத்தை நிதிக் கமிஷன் விடுவிக்க வேண்டும் என்றும், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ஊராட்சி செயலர்கள் மூலம் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு அனுப்பிய பேக்ஸில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version