விபத்துகளை தடுக்கும் வகையில் சாயல்குடி- தூத்துக்குடி எல்லை கன்னிராஜபுரம் பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஏர்வாடியிலிருந்து, சாயல்குடி வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், நாள்தோறும் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாதலங்களுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்வது வழக்கம்.
இந்நிலையில் சாயல்குடி-தூத்துக்குடி எல்லை கன்னிராஜாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாகவும், விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனங்கள் நிற்காமல் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, சாயல்குடி-தூத்துக்குடி கன்னிராஜபுரம் எல்லையில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்றும், அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.