திருவொற்றியூரில் சிகரெட்டை பற்ற வை, ஜூஸை ஊட்டு ரகளையில் ஈடுபட்ட ரவுடி

சென்னை திருவொற்றியூரில், சிகரெட்டை பற்ற வைத்து கொடு, ஜூஸை ஊட்டி விடு என்று போதையில் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில்ரவி. இவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அருகே உணவகம் நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்றுமுன் தினம் இரவு ரவுடி ஒருவர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

மேலும் சிகரெட்டை பற்ற வைத்து கொடு, ஜூஸை ஊட்டி விடு என உணவக ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் உணவகத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்களையும் பணம் கேட்டு சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் உணவகத்திற்கு வந்த ரவுடி சிகரெட்டை புகைத்து ஊழியர்கள் முகத்தில் ஊதி தகராறில் ஈடுபட்டதும், உணவகத்தில் புகுந்து தண்ணீர் ஜக் மற்றும் நாற்காலி எடுத்து ஊழியர்களை தாக்குவதும், அருகில் இருந்த கடையில் புகுந்து சிகரெட் பாக்கெட்டை திருடி செல்வது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

சம்பவம் குறித்து தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியான காசிமேடு பகுதியை சேர்ந்த பிரேம் என்கிற பிரேம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இரவு நேரங்களில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரவுடிகளின் கூடாறமாக மாறிவருகிறது. இதனால் இரவு நேரங்களில் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்திற்கு ஒரு அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காசிமேடு மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version