ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல்-”சாதி பெயரை கூறி இழிவாக பேச்சு”

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இடிக்கப்படவுள்ள அரசுப் பள்ளி கட்டித்தின் மேற்கூரை கம்பிகளை, ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவரான திமுக பிரமுகர் எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டமடுவு அதிமுக ஊராட்சி மன்றத் தலைவராக அட்டவணை வகுப்பை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் உள்ளார். துணைத் தலைவராக, திமுக பிரமுகர் ரமேஷின் மனைவி பாப்பாத்தி உள்ளார்.

திமுக பிரமுகர் தனது மனைவி துணைத் தலைவர் என்பதாலும், தன்னிடம் ஆளுங்கட்சி அதிகாரம் உள்ளதாலும், ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடிக்கப்படவுள்ள பழுதடைந்த கட்டிடத்தின் மேற்கூரையை, ஊராட்சி மன்றத் தலைவருக்கு தெரியாமல், பள்ளி மேலாண்மைக்குழு தலைவரின் ஆதரவோடு பிரித்து இரும்புகளை எடுத்துச் சென்றுள்ளார்.

இதனை அறிந்து, அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, அரசுக்கு சொந்தமான பொருட்களை கொண்டு வந்து வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் ரமேஷ், ஜெயலட்சுமியை சாதியின் பெயரைக் கூறி திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, திமுக பிரமுகர் ரமேசுக்கு ஆதரவாக 5 வது வார்டு உறுப்பினர் வெங்கட்ராமன், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆதரவாளர்களை அவர்களின் சாதியின் பெயரைக் கூறி திட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

பள்ளியில் உள்ள இரும்பு கம்பிகளை திமுக பிரமுகர் தூக்கிச் சென்றது குறித்து, பள்ளி மேலாண்மைக் குழு தலைவரான திமுகவைச் சேர்ந்த சேட்டு என்பவரிடம், பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் சீனு கேட்டுள்ளார். அதற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், வழக்கு தொடுக்கும்படி கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, காவல் கண்காணிப்பாளரிடம் திமுக பிரமுகர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி துணை  புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version