மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளான ஆரணி மற்றும் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தமது வாக்கினை உறுதிப்படுத்தும் விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு அன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூவாயிரத்து 567ம், விவிபேட் இயந்திரங்கள் மூவாயிரத்து 711ம் பயன்படுத்தப்பட உள்ள நிலையில், இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அதிகாரி கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.