திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் எடை குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதிலும் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
தாயின் கருப்பையில் குறைந்தது 37 வாரங்கள் இருந்து அதன்பிறகு பிறக்கும் குழந்தைகள் இரண்டரை கிலோ எடையுடன் இருக்கும். ஆனால் ஒரு சில குழந்தைகள் 25 வாரத்திலிருந்து 30 வாரத்திற்குள் பிறக்கின்றன. இவ்வாறு குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எடை குறைவாகவே இருக்கின்றன.
குறைபிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறு வயதில் திருமணம் மற்றும் வயது முதிர்ந்த நிலையில் கர்ப்பம் தரிப்பது , போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் எடை குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தல் ரத்த அழுத்தம் உள்ள பெண்கள் மற்றும் அதிகளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கும், இடைவெளிவிடாமல் குழந்தைப் பேறு போன்ற காரணங்களாலும் எடை குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் இது போன்ற கர்ப்பிணிப் பெண்களை கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரசவத்திற்குப் பிறகு எடை குறைபாடுடைய குழந்தைகளை பராமரிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் செயல்பாட்டில் இருப்பதால் உடல் எடை குறைபாட்டால் குழந்தை உயிரிழப்பு சம்பவம் முற்றிலும் தடுக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது போன்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் பிறந்தால் உடனடியாக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு குழந்தைப்பேறுக்காக பல்வேறு உயர்ரக உபகரணங்களை வழங்கி இருப்பதால் இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மாவட்டம் முழுவதிலுமிருந்து சிகிச்சைக்காக குழந்தைகள் கொண்டு வரப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிகழாண்டில் மட்டும் 130 எடை குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.