"ஜீபூம்பா காட்டமுடியாது" என்ற பொதுப்பணித்துறை அமைச்சரின் பதிலால் பொதுமக்கள் அதிருப்தி

திருப்பத்தூரில், வெள்ள பாதிப்புகளை பெயரளவிற்கு ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலுவை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்ட மக்களிடம் ஜீபூம்பா காட்டமுடியாது என்று அமைச்சர் கூறிச்சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கதிரம்பட்டி, புதுக்கோட்டை உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெயரளவுக்கு ஆய்வு செய்து சென்றதாகக் கூறப்படுகிறது.

பாச்சல் என்ஜிஓ நகர் பகுதியில், திருப்பத்தூர் எம்.எல்.ஏ அ.நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ, தேவராஜ், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உள்ளிட்டோருடன் எ.வ.வேலு ஆய்வு மேற்கொள்ளச் சென்றார். அப்போது அமைச்சரை முற்றுகையிட்ட குடியிருப்புவாசிகள், கடந்த 5 தினங்களாக வெள்ளத்தில் சிக்கி பரிதவித்ததாகக் கூறினர்.

தங்கள் பகுதியை எந்தவொரு அதிகாரியும், எம்.எல்.ஏவும் வந்து பார்க்கவில்லை என்றும், சாலையில் நின்றபடி பெயரளவுக்கு ஆய்வு மேற்கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து அப்பகுதி மக்களிடம் எரிந்து விழுந்த பேசிய அமைச்சர் எ.வ .வேலு , ஆக்கிரமிப்புகளை அகற்றி இரண்டு நாட்களில் மழைநீரை வெளியேற்றுவதாகவும், ஜீபூம்பா வேலை எல்லாம் காட்டமுடியாது என்றபடியும் அங்கிருந்து கிளம்பியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Exit mobile version