கன மழையால் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதி தனித்தீவாக காட்சியளிக்கிறது. குடியிருப்புகளுக்குள் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர், பெரியார் நகர், சுதேசி நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தொடர் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளன.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அடுத்தடுத்து பெய்த கனமழையால் தற்போது இடுப்பு அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால், அப்பகுதி மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன், கழிவுநீரும் கலந்து தூர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பலர் தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். மேலும், அத்தியாவசிய தேவைக்கு படகு மற்றும் லாரி டியூப் மூலம் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.