திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள் இன்று…

சிறந்த முருக பக்தரும், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்தவருமான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் இன்று… பக்தி, பேச்சு, இசை, தொண்டு, எளிமை என வாழ்ந்த தமிழ் பெருங்கடல் வாரியாரின் பயணத்தை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் எனும் சிற்றூரில் 1906 ஆம் ஆண்டு பிறந்த வாரியாரின் இயற்பெயர் கிருபானந்தவாரி என்பதாகும். தனது தந்தை மல்லையதாசரிடமே கல்வி, இசை,இலக்கணங்களை கற்றுத் தேர்ந்தார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்ற இவர், வீணைப் பயிற்சி எடுத்துக்கொண்டு, சங்கீத ஞானத்தால் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், முதலான தோத்திரப் பாடல்களை இன்னிசையுடன் பாடலானார்.

19 வயதிலேயே தொடங்கிய அவரது ஆன்மீகச் சொற்பொழிவுப் பயணம் பெரும்பாலும், பாமர மக்களின் மொழியில் பேச்சு வழக்கிலேயே அமைந்திருந்தது. இடையிடையே குட்டிக் கதைகள், நகைச்சுவையோடு நடைமுறைச் செய்தியை நயம்படக் கூறுவதும் இவரின் சிறப்புகளாகும். எளிய தமிழில் இனிய குரலில் இசையையும் கலந்து அவர் கொடுக்கும் ஆன்மீக அமுதத்தை அள்ளிப்பருக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் ஓடோடி வந்த காலங்கள் உண்டு. அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே அந்தக்காலத்தில் இல்லை எனலாம்.

500 க்கும் மேற்பட்ட பக்தி மணம் கமழும் கட்டுரைகளையும், தாத்தா சொன்ன குட்டிக் கதைகள், கந்தவேள் கருணை, சிவனருட் செல்வர் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நூல்களையும் அவர் எழுதியுள்ளார். ”திருப்புகழ் அமுதம்” எனும் மாத இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார். சமயம், இலக்கியம் எழுத்து, பேச்சு, இசை மட்டுமின்றி பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை மிக்கவராய் திகழ்ந்தார். அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றும் பலராலும் பாராட்டப் பெற்றார்.

1993 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி லண்டன் பயணம் முடித்துவிட்டு தமிழகம் திரும்பும்போது
விமானத்திலேயே வாரியார் சுவாமிகளின் உயிர் பிரிந்தது. வாரியாரின் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. இன்றைக்கும் அவரது இனிய குரலில் அவற்றைக் கேட்கும்போது இறைபக்தியோடு தமிழ்இன்பத்தின் சுவையையும் உணர முடியும். முக்கால் நூற்றாண்டுகாலாம் தமிழாக, இசையாகவே, இறையருளின் சிகரமாக விளங்கிய திருமுருக கிருபானந்த வாரியாரின் புகழ் தமிழ் உள்ளவரை நீடித்திருக்கும்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக பாரதிகனகராஜ்..

Exit mobile version