விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லாததால், அவருக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தன்னை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது, தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பல மாவட்டங்களுக்கு சென்று வருவதால் தனக்கு நிரந்திர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர், எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அந்த மாவட்ட காவல்துறை சார்பில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் 24 மணி நேர பாதுகாப்புக்கு அவசியமில்லை என்றும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.