திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தார்.முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில் மாலை 5.20க்கு முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.
சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண்பதற்காக , தமிழகம் மட்டுமின்றி வெளி நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். பக்தர்களின் முன்னிலையில் தனது கையிலிருந்த வேலைக்கொண்டு சூரனை முருகன் வதம் செய்தார்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டிருந்தது.