பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் மட்டுமல்ல மனிதனின் உணவு வகைகளும் காணாமல் போக உள்ளன – என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். சாக்லேட், காபி, மீன், உருளைக் கிழங்கு இவையெல்லாம் விரைவில் நமக்குக் கிடைக்காமல் போக உள்ளன – இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
காலநிலை மாற்றங்களைப் பொருத்தே தாவரங்களும், மீன்களும் இடங்களைத் தேர்வு செய்து வளர்கின்றன. இரண்டு டிகிரிக்கு வெப்ப நிலை மாறினால் தாவரங்களும் மீன்களும் தங்கள் உற்பத்தியை 50% வரை குறைத்துவிடும் என்கிறது அறிவியல். இந்நிலையில் சமீபத்திய பருவநிலை மாற்றங்களால் நமது உணவுப் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கும் பல தாவரங்களும், மீன்களும் தற்போது பெரும் அழிவை எதிர்நோக்கி உள்ளன – என்கின்றன ஆய்வுகள். இந்தப் பட்டியல் சாக்லேட், காபி, டீ, உருளைக் கிழங்கு, மீன்கள் என நீள்கிறது…
சாக்லேட்டின் மூலப் பொருளான கோகோ அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதத்தில் வளரக் கூடியது. இந்தோனேஷியாவிலும் ஆப்ரிக்காவிலும் கோகோவின் விளைச்சல் ஏற்கனவே பெருமளவில் குறைந்துள்ளது. கானா நாட்டில் கோகோ விளைச்சல் கடந்த 50 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் விழுந்துவிட்ட நிலையில், இன்னும் மோசமான விளைச்சல்களே எதிர்காலத்திலும் காத்திருக்கின்றன.
காப்பிக்கொட்டைகள் விளையும் இடங்களும் சுருங்கி வருகின்றன. வரும் 2050ல் காபி விளையும் பரப்பு பாதிக்குப் பாதியாகக் குறைய உள்ளது. 2080க்குள் சுவை மிக்க சில காபி ரகங்கள் முற்றாக அழிய உள்ளன. டீயைப் பொருத்தவரையில், பருவநிலை மாற்றத்தால் தேயிலை தனது மணம், சுவை ஆகியவற்றை படிப்படியாக இழந்து வருகிறது.
உருளைக் கிழங்கும் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகிறது. வறட்சியின் போது அது தனது சராசரி விளைச்சலில் பாதியைக் கூட கொடுக்க மறுக்கிறது.
நிலத்தைத் தாண்டி கடலைப் பார்க்கப்போனால், உலகின் 17% மக்களின் ஒரே புரத ஆதாரமாக கடல் மீன்களின் எண்ணிக்கை அதி வேகமாகக் குறைந்து வருகிறது. கடலின் சில இடங்களில் மீன்களின் எண்ணிக்கை 3 மடங்கு வரை குறைந்து உள்ளது. இன்னொரு பக்கம் நீரில் ஆக்சிஜன் குறைவதால் மீன்களின் அளவுகளும் சுருங்க ஆரம்பித்து உள்ளன.
அடுத்த நூற்றாண்டில் கால்வைக்கும் மனிதர்களுக்கு சாக்லேட், காபி, சுவையான டீ, உருளைக் கிழங்கு, பெரிய மீன்கள் – எல்லாம் கடந்த காலக் கதைகளாக மட்டுமே இருக்கும்.
பருவநிலை பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தவறினால் இந்த மோசமான சூழலியல் விளைவுகளை இந்த நூற்றாண்டில் நாமே சந்திப்போம் என்கின்றன உலகளாவிய ஆய்வுகள். உலகம் அழிவின் பாதையில் செல்லும் போது, அது மனிதர்களை மகிழ்ச்சியோடு வாழ விடாது – என்பதையே இந்த ஆய்வுகள் நமக்குக் காட்டுகின்றன.