தெர்மாகோலில் கட்டப்படும் நிஜ வீடுகள் – ஒரு வீட்டின் மதிப்பு ரூ.13 லட்சம்

பள்ளிப் பருவத்தில், தெர்மாகோலில் வீடு கட்டி மகிழாதவர்கள் எவரும் இல்லை.. ஆனால் அவை பொம்மை வீடுகள்… ஆனால் தற்போது, நிஜமான வீட்டையே தெர்மாகோலில் கட்டியுள்ளனர்… அதிகரித்து வரும் தெர்மோகிரீட் வீடுகள் பற்றிய செய்தித் தொகுப்பை காணலாம்..

சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வலுவூட்டிய கான்கிரீட், கம்பி வலை ஆகியவற்றுடன் எக்ஸ்பேண்டட் பாலிஸ்டிரின் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டடுக்கு மாடி வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்டுவதற்கான மொத்த செலவே 15 லட்சம் ரூபாய் தான். இந்த முறையில் உருவாக்கப்படும் கட்டிடங்களுக்கு, தெர்மோகிரீட் பேனல் வீடுகள் என்று பெயர். இதற்கு, செங்கற்களே தேவையில்லை. கம்பியில் கான்கிரீட்டைக் கொட்டி எக்ஸ்பேண்டட் பாலிஸ்டிரின் தொழில்நுட்பத்தில் சுவரைச் சுலபமாக எழுப்பலாம். மற்றொரு சிறப்பம்சமாக, இந்த வீட்டின் மேற்புறம், சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்பட்டு, வீட்டிற்கு உபயோகிக்கப்படுகிறது

தெர்மோகிரீட் முறையில் வீடு கட்டினால், செலவு 30 சதவீதம் வரை குறையும். 40 நாட்களில் வீட்டை கட்டி முடிக்கலாம். இந்த கட்டிடம் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களையும் தாங்கி நிற்கும் வலிமை கொண்டது என்று கூறுகின்றனர். செங்கல் சுவர்களில் ஏற்படும் விரிசல்கள், நீர்கசிவு போன்ற பிரச்னைகள் இந்த வீட்டில் இல்லை. வீட்டின் உள்பகுதியில் குளிர்ச்சி தரும் தன்மையுடையது. சொந்தவீடு கட்டும் பலரது கனவை தெர்மோகிரீட் பேனல் வீடுகள் நிச்சயம் நிறைவேற்றும்.

Exit mobile version