ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் சகிப்புத்தன்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாட்டு மக்களின் உதவியுடன் மத்திய அரசு வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் இதுவரை 132 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருப்பதாக கூறிய அமித் ஷா, அதில் 93 முறை காங்கிரஸ் தான் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உள்ளதாக விமர்சித்தார். ஜனநாயகம் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதியில்லை என அமித்ஷா சாடினார். இதனிடையே, காஷ்மீர் எல்லை பிரச்னைக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான் காரணம் என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தானுக்கு கொடுக்காமல் இருந்திருந்தால் தற்போது இந்த பிரச்னை இருந்திருக்காது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.