தமிழகத்தில் 30 ஆயிரம் மெகாவாட்டிற்கு மின் நிறுவுதிறன் உள்ளதால், மின்தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டிற்கு வாய்ப்பு இல்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்வாரியம், தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக தேவைப்படும் 15 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பூர்த்தியாகியுள்ளது. எனவே மின்தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மின்வாரியத்தின் நிறுவு திறனும் தற்போது அதிகரித்துள்ளது.
அதன்படி, மரபுசார் எரிசக்தி ஆதாரங்களான நீர் மின் நிலையங்கள் மூலம் 2 ஆயிரத்து 314. 90 மெகாவாட் மின்சாரமும், அனல் மின் நிலையங்கள் மூலம் 4 ஆயிரத்து 320 மெகாவாட் மின்சாரமும், எரிவாயு மின்நிலையங்களில் 516.08 மெகாவாட் மின்சாரமும், மத்திய தொகுப்பிலிருந்து 6 ஆயிரத்து 312 மெகாவாட் மற்றும் தனியார் நிறுவன கொள்முதல் மூலம் 3 ஆயிரத்து 876.50 மெகா வாட் மின்சாரமும் பெறப்படுகிறது. இதன் மூலம் மரபுசார் எரிசக்தி ஆதாரங்கள் வகையில் 18 ஆயிரத்து 414.28 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் நிறுவு திறன் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல காற்றாலை, சூரிய ஒளி, தாவரக்கழிவு உட்பட மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 11 ஆயிரத்து 776 மெகாவாட் மின்சாரம் என்று, ஆக மொத்தம் 30 ஆயிரத்து 191 மெகாவாட்டிற்கான நிறுவு திறனை மின்வாரியம் ஏற்படுத்தியுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.