நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு அச்சத்தால் சமீபத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, ‘ உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது’ என விமர்சித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்றங்களை தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 13 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 ஆம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது. இதனை ஆய்வு செய்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என இன்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், கொரோனா பேரிடர் காலத்திலும் அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, காணொலி காட்சி மூலமாக 42,233 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்று அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றிய சூழலில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமான விமர்சனமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளர். மேலும், தனி நபர்கள் தகவல்களை சரி பார்த்த பிறகே பொதுத்தளத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அது தவறான பல கேள்விகளுக்கு இடம் கொடுத்து விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சு சுதந்திரம் என்பது நியாயமான விமர்சனத்தையும் உள் அடக்கியது தான் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், நடிகர் சூர்யாவின் கருத்துக்களை ஆய்வு செய்த போது, பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது, குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும், கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யாவின் விமர்சனம் என்பது அவசியமில்லாத ஒன்று எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருவதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.