தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தரவுகள், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவித்தார். அதே போன்று, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்திருந்தது சரிதான் எனவும் கூறினார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்ற முடிவை கேரள அரசும், மேற்கு வங்க அரசும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தங்களின் அரசியல் லாபத்திற்காக, ஏழை மக்களின் வளர்ச்சியை தடுக்க வேண்டாம் என்று கூறினார். தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த, மக்களவை உறுப்பினர் ஓவைசியின் கருத்து பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சூரியன் கிழக்கில் உதிக்கும் என பாஜக கூறினால், இல்லை சூரியன் மேற்கில்தான் உதிக்கும் என கூறுபவர் ஓவைசி என்றார். மேலும், எப்போதும் பாஜகவின் நிலைப்பாட்டை எதிர்ப்பதையே ஓவைசி வழக்கமாக வைத்துள்ளார் எனவும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.