சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை!

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை எனவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும், சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனவும், முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும், தகவல்கள் வெளியாகின. இது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என தெரிவித்த அவர், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். இதையடுத்து, வரும் திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version