சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு எதிராக மிகத் தீவிரமான ஆதாரங்கள் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், சிபிஐ தெரிவித்துள்ளது.
மாறன் சகோதரர்களுக்கு எதிரான, சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டு பதிவு நடைபெற்றது, அப்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும், நேரில் அஜராகி இருந்தனர். இந்த நிலையில் சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிபிஐ நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாறன் சகோதரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
தங்கள் மீது குற்றம் இல்லை என்றால், வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு அதன் மூலமே குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்க வேண்டுமே தவிர பொத்தாம் பொதுவாக ஆதாரமில்லை, ஆவணங்கள் இல்லை என்று கூறும் கூற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள கூடாது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டுள்ளதால், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியது. அதோடு, மாறன் சகோதரர்கள், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க உத்தரவிட வேண்டும் எனவும், இவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். தொடர்ந்து சிபிஐயின் வாதத்திற்கு பதில் அளிக்குமாறு மாறன் சகோதரர்கள் தரப்பிற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.