மாயனூர் தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களை விவசாயத்திற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்காக கடந்த 13ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீரானது கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. இந்தநிலையில் மாயனூர் தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளைமேட்டு வாய்க்கால்களை விவசாயத்திற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர், அனைவருக்கும் அமைச்சர் இனிப்புகள் வழங்கினார்.
இந்த வாய்க்கால்களிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் மூலம் 27 ஆயிரத்து 684 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அவர் தெரிவித்தார். வாய்க்கால்களிலிருந்து திறந்து விடப்படும் நீரானது படிப்படியாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.