கோவை துடியலூரில் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில், 167 சவரன் நகைகள் மற்றும் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் டவுன் காலில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் நேற்று பாலக்காட்டிற்கு சென்றுள்ளார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 167 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ஒன்றரை லட்ச ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். கைவரிசை காட்டிய கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.