அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், பாதுகாப்பு இடைவெளியுடன் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளார். திரையரங்கில் பல்வேறு இடங்களில் கைகளை சுத்தப்படுத்த சானிடைசர்கள் வைக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட இடைவேளையின் போது பார்வையாளர்கள் வெளியில் நடமாடுவது தவிர்க்கப்படவேண்டும் மற்றும் பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், திரையரங்கின் உள்ளே உணவு பொருட்களை விற்பனை செய்ய அனுமதியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைக்காட்சி தொடங்குவதற்கு முன்பும் இறுதியிலும் திரையில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு காட்சிகள் ஒளிபரப்பப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க டிஜிட்டல் முறையில் டிக்கெட் விற்பனை நடத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.