திருமங்கலம் -விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே சிமெண்ட் கல்லை வைத்து சதிச்செயலில் ஈடுபட முயன்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 26ம் தேதி இரவு சிமெண்ட் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதி வழியாக சென்ற முத்துநகர் விரைவு ரயில், கல்லை சுக்குநூறாக்கி சென்றதால் சதிச்செயல் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து ரயில் ஒட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், தி.அழகுமலையை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.