திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் கட்டிட பணிகளை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் ஈசானிய லிங்கம் அருகில், தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதிப் பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
430 நபர்கள் தங்க கூடிய வகையில் உணவகத்தோடு கட்டப்பட்டு வரும் இந்த மூன்று தள கட்டிடத்தை ஆய்வு செய்த பின்னர், கிரிவலப்பாதையில் அருணகிரிநாதருக்கு 70 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டவும் இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்றும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.