அதிமுகவின் சிறப்பான திட்டங்களை தடுப்பதே திமுகவின் வேலையாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விநாயகபுரம், ரத்தினபுரி, பாண்டியாபுரம், குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வேட்பாளர் மோகன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செல்லும் இடமெங்கிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், கும்ப மரியாதை செய்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே, குலையன்கரிசலில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக திட்டங்களை தடுப்பதே திமுகவின் வேலையாக உள்ளதாக குற்றம் சாட்டினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் குலையன்கரிசலில் உள்ள சுகாதார மருத்துவமனையை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.