சிகிச்சை தாமதத்தால் உறவினர்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த பெண்

மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவர், மூச்சு விட முடியாமல் தவித்த நிலையில் சிகிச்சை அளிக்க தாமதமானதால் உயிரிழந்த காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக வழுவூரை சேர்ந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ராஜேஸ்வரி என்பவரை, உறவினர்கள் அழைத்து வந்தனர்.

மருத்துவமனையில் படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்ட நிலையில், சிகிச்சையளிக்க தாமதமானதால் மருத்துவமனை வளாகத்திலேயே ராஜேஸ்வரி காக்க வைக்கப்பட்டார்.

வெகுநேரமாக மூச்சு விட முடியாமல் தவித்த அவர் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ராஜேஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து ராஜேஸ்வரியின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து, உறவினர்கள் எடுத்து சென்றனர்.

மூச்சு விட முடியாமல் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதி, போதிய மருத்துவர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அரசு இனிமேலும் அலட்சியம் காட்ட வேண்டாம் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version