பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு, ஒரு முழு வீட்டையே கட்டிப் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
பிரேசில் நாட்டின் சா பாலோ மாகாணத்தைச் சேர்ந்தவர் இவோன் மார்ட்டின் என்கிற பெண். விவசாயியான இவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்து, கைக் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் இவரது கைக்குழந்தையும் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க, இவோன் மார்ட்டின் கடும் அதிர்ச்சிக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளானார். தேற்றி ஆறுதல் கூறக் கூட யாரும் இல்லாத நிலையில், வேறு ஏதேனும் வேலைகளைச் செய்வதன் மூலம் துக்கத்தில் இருந்து மனமாற்றம் அடையலாம் என்று நினைத்த இவருக்கு, அடுத்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
இவர் வாழும் சா பாலோ மாகாணத்தில் அதிக கண்ணாடி பாட்டில்கள் கழிவாகக் கிடைத்தன. அதனால், இந்த பாட்டில்களைக் கொண்டு ஒரு வீடு கட்டினால் என்ன? – என்ற விநோத எண்ணம் இவோன் மார்ட்டினுக்கு வந்தது.
இதற்காகத் திட்டமிட்ட அவர், 10 அடி உயரம் 27 அடி அகலம் 24 அடி நீளம் கொண்ட ஒரு முழுமையான வீட்டைக் கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு கட்டி முடித்தார். கட்டில், சோபா, வரவேற்பறை, சமையலறை, கழிவறை என அனைத்தும் கண்ணாடி பாட்டில்களால் உருவாக்கப்பட்ட இந்த வீட்டின் கட்டுமானத்தில் கண்ணாடி பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று சாந்தின் மூலமாக இணைக்கப்பட்டு வலிமைப்படுத்தப்பட்டன. இதற்காக 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை இவோன் மார்ட்டின் பயன்படுத்தி உள்ளார்.
கண்ணாடி பாட்டில்கள் போக, இந்த வீட்டின் பிற பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டு உள்ளன. இந்தக் கண்ணாடி வீடு, கட்டுமானச் செலவைக் குறைத்துள்ளதோடு, சுற்றுச் சூழலையும் பாதுகாக்கின்றது என்று இவோன் மார்ட்டின் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.