தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில் அரபிக்கடலில் புதிதாக ‘வாயு’ புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நிலப்பகுதியை விட கடல்பகுதியில் அதிக மழையை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கேரளாவில் பருவமழை துவங்கியுள்ளது. இந்தநிலையில் அரபிக்கடலில் மாலத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு வாயு என்று பெயரிடப்பட்டுள்ளது.
தீவிர புயலாக வாயு புயல் வலுப்பெறும் என்றாலும் பெயருக்கேற்றாற்போல அதிக மழையை தராமல் அதிக காற்றையே இந்த புயல் தரும் என்றும் கடல்பகுதியில்தான் அதிக மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக 3 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு தினங்களில் வெப்பத்தின் தாக்கமும் அதைதொடர்ந்து அனல்காற்றின் பாதிப்பும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் அனல்காற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் பகல் பொழுதுகளில் மக்கள் வெளியில் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.