குழந்தையையும் கணவரையும் கொலை செய்த மனைவி

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே, தன்னுடைய கணவரையும், ஒரு வயது குழந்தையையும் கொலை செய்து புதைத்த 20 வயது பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர்.

18 வயதில் திருமணம்.. 20 வயதில் கணவரையும் குழந்தையையும் கொலை செய்த குற்றச்சாட்டு என, இந்த இளம்பெண்ணின் செயலைக் கண்டு அதிர்ந்து கிடக்கிறது வேலூர் மாவட்டம். காஞ்சிபுரம் மாவட்டம் திமிரியை அடுத்த பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா. எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடை அடுத்த தாஜ்புரா கூட்ரோடு பகுதியை சேர்ந்த தீபிகா என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரணீஷ் என்ற ஒரு வயது குழந்தை இருந்தது. இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி முதல், தனது கணவர் ராஜா மற்றும் குழந்தையை காணவில்லை என ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் தீபிகா புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசாருக்கு தீபிகா மீதே சந்தேகம் திரும்பியது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், தீபிகாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தன் கணவரையும், குழந்தையையும் கொலை செய்த தீபிகா, ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா மற்றும் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோரின் முன்னிலையில், இருவரையும் கொன்று புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார். எலி விஷத்தில் சாகாத ராஜாவை, தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக தீபிகா போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இத்தனையும் செய்துவிட்டு, காவல் நிலையம் சென்ற தீபிகா, தனது கணவரையும் குழந்தையையும் ஒருவாரமாக காணவில்லை என நயவஞ்சகமாக, புகார் கொடுத்துள்ளார்.

போலீசார், ராஜா மற்றும் குழந்தை பிரணிஷ் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே இந்த கொலைக்கு பின்னால் வேறு சில நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜாவின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டிய வயதில், கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு நிற்கும் தீபிகாவின் செயல் அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.

Exit mobile version