இந்திய மக்களின் வரவேற்பை மறக்கமுடியாது – டிரம்ப்

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 மாதங்களில் அதிபர் டிரம்பை 5 ஆவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறினார். இன்றைய பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு நல்லுறவு, பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்டவைகள் பற்றி விவாதித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உலக அளவில் தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவை தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவு வலுப்பெற்றுள்ளதாக கூறினார். அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகள் இந்தியா வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் பற்றி பேச்சுவார்த்தையின் போது ஆலோசித்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்திய மக்கள் அளித்த சிறப்பான வரவேற்பை தானும் தனது மனைவி மெலானியாவும் என்றென்றும் மறக்கமாட்டோம் எனவும் அதிபர் டிரம்ப் கூறினார்.

Exit mobile version