ஊரில் போக்கிரி தனம் செய்து சுற்றுபவர்களை கட்டுப்படுத்த காவல்துறையும், வெளியில் இருந்து நாட்டை அச்சுறுத்துபவர்களை அடக்க ராணுவமும் உருவாக்கப்படுவதைப் போல், கட்டுப்பாடின்றி மூர்க்கத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானைகளை பிடித்து, வனப்பகுதிக்குள் அனுப்ப இத்தகைய கும்கி யானைகள் உருவாக்கப்படுகின்றன.
கும்கி என்ற பார்ஸி மொழிச் சொல்லுக்கு உதவி என்று பொருள். ஆங்கிலேயர்கள் கும்கி யானைகளை மரங்களை சுமந்து செல்லவும் பிற வேலைகளுக்கும் பயன்படுத்தினர். முன்னர் கும்கி என்றாலே அது பெண் யானைகள் தான்.
காட்டில் சுற்றித்திரியும் ஆண் யானைகளை பிடிக்க இந்த பெண் கும்கி யானைகள் பயன்படுத்தப்படும். காட்டில் ஒரு இடத்தில் இளம் பெண் யானை கட்டி வைக்கப்படும். பெண் யானையின் உடலில் இருந்து வெளியாகும் திரவத்தின் வாசனையை நுகரும் இளம் ஆண் யானைகள், அந்த பெண் யானையை தேடி வந்து முகாமிடும்.
காதல் உணர்வோடு வரும் ஆண் யானைகள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, மரம் சுமக்க அனுப்பிவைக்கப்படும். தற்போது, ஆண் யானைகளே கும்கி யானைகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக நாள் ஒன்றுக்கு 2 முறை வீதம் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சி பெற்ற யானைகள், சமிக்கைகளுக்கு கட்டுப்படும். உதாரணமாக நிர்கே என்ற கட்டளையைக் கேட்டால் எதிரே உள்ள யானைகளை கும்கி யானைகள் தாக்கத் தொடங்கிவிடும். பைட் என்றால் படுக்கும். ஆல் என்றால் பதுங்கிக் கொள்ளும். இதில் வயது வந்த ஆண் யானைகளுக்கே கும்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பிறகே கும்கி யானைகள் காட்டு யானைகளை பிடிக்க பயன்படுத்தப்படும்.