மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதியன்று, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அணையின் நீர்மட்டம் 120அடியை எட்டியது. இதனையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக இரண்டாவது முறையாக நீர் திறக்கப்பட்டது. தற்போது கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர், 4 நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. தற்போது நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.