கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பருவ மழை அதிகமாக உள்ள காரணத்தினால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த நீரில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் கபினி அணையில் இருந்தும், 25 ஆயிரம் கன அடி நீர் கபினி துணை அணையான, தாரகா அணையில் இருந்தும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 500 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது.
இதற்கிடையில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த நீரானது நேற்று மாலை 6 மணி அளவில் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளின் முகதுவாரமான, பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. பிலிகுண்டுலுவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரி நீர் இரவு 8 மணி அளவில் ஒகேனக்கலை அடைந்தது. அங்கிருந்து, 74 கிலோமீட்டர் தூரம் பயணித்து நள்ளிரவில் மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வந்து சேரத் தொடங்கியது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி ஆகும். தற்போது அணையில் 20 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், கர்நாடகாவிலிருந்து 1,50,500 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 24 மணி நேரம், 12,000 கன அடி தண்ணீர் வந்தாலே, அணையில் ஒரு டி.எம்.சி தண்ணீர் நிரம்பும் என்பது பொறியாளர்களின் கணக்கு. தற்போதைய நிலையில், சராசரியாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் அணையை வந்தடைந்தாலும், மேட்டூர் அணை அதன் மொத்த கொள்ளளவை 6 நாட்களில் எட்டும் என்று நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே இந்த ஆண்டு கடைமடை பகுதிகள் உட்பட காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று டெல்டா மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.