மதுரையில், தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாக சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்திற்க பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளனர். அப்போது, பெட்ரோலின் நிறம் மாறி இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், இருசக்கர வாகனம் இயங்கவில்லை.
இதேபோல், அந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்பிய பல வாகனங்களும் இயங்கவில்லை. இதையடுத்து, பெட்ரோலை பாட்டில்களில் எடுத்து பார்த்தபோது, அதில் தண்ணீர் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதைப் பற்றி பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் கேட்டபோது, முழுமையாக விளக்கம் தரவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் பங்குகளில் உண்மையிலேயே தண்ணீர் கலக்கப்படுகிறதா என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.