நீர் வரத்து அதிகரிப்பால் 93 அடியை எட்டிய பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

நீர் வரத்து அதிகரிப்பால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93 அடியை எட்டியது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை, குறித்த நேரத்தில் பெய்யாததால் அணையின் நீர்மட்டம் 63 அடியாகவும், நீர் இருப்பு 8 டிஎம்சியாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல், அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, தற்போது 93 அடியை எட்டி உள்ளது. அணையில் நீர் இருப்பு 23.5 டிஎம்சி யாகவும் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 916 கனஅடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பவானி ஆற்றில் 1300 கன அடி வீதமும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version